பிரிந்து விடாதீர்கள்
— September 17, 2019 Comments Off on பிரிந்து விடாதீர்கள்அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்-குர்ஆன் 3: 103)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது என்று கூறினார்கள்.
எந்த வகையிலும் இந்த சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். எந்தளவுக்கு என்றால் பள்ளியில் ஒரு இமாமை பின்பற்றி ஜமாத்தாக தொழவரும் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்திரிப்பதைக் கண்டு உங்களுக்கு என்ன வந்து விட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காண்கிறேன் என்று கண்டித்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமீரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்
ஜிஹாத் செய்வதற்காக புறப்பட்ட ஸஹாபாக்கள், ஓய்வு நேரத்தில் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை.
அபூசா அல்பா(ரலி) அறிவிக்கின்றார்கள் ஜிஹாதில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள் முகாமிட்டபோதெல்லாம் தங்கள் வசதிக்காகத் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) நீங்கள் இவ்வாறு பிரிந்திரிப்பது ஷைத்தானின் யுக்திகளில் ஒன்றாகும் என்று எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு முஸ்லிம்கள் எங்கே முகாமிட்டாலும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்து நெருங்கிப் படுத்தே ஓய்வெடுப்பார்கள், எந்த அளவிற்கு நெருங்கிப் படுத்திருப்பார்கள் என்றால் ஒரே போர்வையைக் கொண்டே அவர்களைப் போர்த்திவிடலாம். (ஆதாரம்: அபூ தாவூத்)
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் எந்த காரணத்திற்காகவும் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என நபி(ஸல்) பலமான தடுப்பு சுவரை கட்டி வைத்துவிட்டே சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்களாகிய நாம் மத்ஹபுகள் பெயரிலும், தரீக்காக்கள் பெயரிலும், இயக்கங்கள் பெயரிலும், நபி(ஸல்) அவர்கள் கட்டிக்காத்த சுவரை இடித்து தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறோம்.
உம்மத்தன் வாஹிதா:
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக உங்கள் உம்மத் – சமுதாயம் – (பிரிவுகளில்லா) ஒரே
சமுதாயம் தான்..
(அல்-குர்ஆன் 21: 92) என்று பறைசாற்றுகிறான்.
மேலும் கூறுகிறான்:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; (அல்-குர்அன் 3: 10).
அல்லாஹ்வை திடமாக நம்பும் இந்த உம்மத்தவர்களைப் பார்த்து
மேன்மைமிக்க சமுதாயம் என்கிறான்
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள
உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின்
சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக
இருப்பதற்காகவுமேயாகும்;
… (அல்-குர்ஆன் 2: 143).
நம்மை நடுநிலை சமுதாயம்
என்றும் புகழ்ந்தும் கூறுகிறானே!. அதற்கு தகுதியுடயவர்களாக நாம் இருக்கிறோமா? பலவாறாக பிரிந்து சிதறிய சமுதாயத்தை வல்ல அல்லாஹ் ஒன்றுபடுத்தி இனி பிரியக்கூடாது என
எச்சரித்தபின்பும் அலட்சியம் செய்து உலகெங்கும் முஸ்லிம்களே முஸ்லிம்களை அடித்து சாகும் நிலை
எதனால்
ஏற்பட்டது.
கண்ணாடி போன்றவர்:
ஒருவர் முஃமினாக இருக்கக்கூடிய நிலையில் சமுதாயத்தை பிரிக்கவோ, சமுதாயத்தை விட்டு பிரிந்து நிற்கவோ ஒருபோதும் எண்ணமாட்டார். ஏனெனில். ஒரு முஃமின்
மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவர் என்றும் ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் உடம்பை
போன்றவர் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு முஃமினுக்கும்
மற்றொரு முஃமினுக்கும் உள்ள
தொடர்பை எந்தளவிற்கு ஆணி அடித்தாற் போல் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதை இந்த சமுதாயத்திலுள்ள
தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா?
இயக்கங்கள்:
கடந்த கால வரலாற்றில் மனித சமுதாயம் வழி தடுமாறிச்
செல்லும் போதெல்லாம்,
முஸ்லிம்களில் பெரும்பாலோர் தமது பணிகளை செய்யத்
தவறியபோதெல்லாம்,
முஸ்லிம்களை
தட்டியெழுப்பி
குர்ஆனை படித்து விளங்கி
செயல்படவும்,
நபி(ஸல்) அவர்களின்
வழிகாட்டுதல்களைப்
பற்றிப் பிடித்திடவும், நீண்ட நெடுங்காலமாக பல மார்க்க அறிஞர்கள்
அரும்பாடு
பட்டிருக்கிறார்கள்.
தூய இஸ்லாத்தைப் பேணி
நடந்து,
நீதி நெறி ஆட்சி செய்த கலீஃபாக்கள் முதல் மரியாதைக்குறிய
இமாம்களிலிருந்து அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்த நூற்றாண்டு வரை உலகளவில் பற்பல நாடுகளில்
பல்வேறு அறிஞர் பெருமக்களும், உலமாக்களும்
செய்த பணிகளும் தியாகங்களும் அபார இமாலய சாதனைகள். இப்படி இஸ்லாத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற
நல்லெண்ணத்தில் மார்க்க அறிஞர்கள் பல வகையில் தனது அறிவை கொண்டு சிந்தித்து தான் விரும்பிய
அமைப்பை முஸ்லிம்
சமுதாயத்தின் முன்
வைக்கிறார்கள்.
இன்று உலகத்தில் புதிய இயக்கம், புதிய ஜமாத், உருவாக்குவது கவர்ச்சிகரமானதாகிவிட்டது. சந்தோஷமாக இளைஞர்களை
ஈர்க்க கூடியதாக உள்ளது. பொதுவாக இன்றைய உலகில் இளைஞர்களிடம் வேலை வாங்குவதென்றால்
அவர்களுக்கு ஒரு பதவியை கொடுத்து விட்டால் போதும், பம்பரமாய் சுழல்வார்கள். அவர்களை அவ்வாறு சுழல
வைப்பது பதவிதான்.
இவ்வுலகை பொருத்தவரை
தவறில்லை. ஆனால் மறுமையைக் குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம்கள், பதவி கிடைப்பது கொண்டு உழைக்க முன்வரும்போதும், புகழுக்காகவோ, பிறஅமைப்பை மிஞ்சி செயல்பட வேண்டும் என்று
பம்பரமாய் சுழன்று
தீனுக்காக பாடுபட்டாலும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தம் எடுபட்டு விடுகின்றது.
நபி(ஸல்) கூறினார்கள்:
உலக புகழுக்காகப் போராடி வெட்டுப்பட்ட ஷஹீத், மார்க்கம்
போதித்த ஆலிம்,
வாரிவழங்கிய கொடைவள்ளல்
அனைவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு
நரகில் தூக்கி எறியப்படுவார்கள், (ஹதீஸ்
சுருக்கம்) அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்.
காரணம் அல்லாஹ்வின் பொருத்தமில்லாமல் இந்த உலகில் பெருமை பாராட்ட
வேண்டும் என்று நினைத்ததால்.
இயக்க அமைப்புகளில்
செயல்படும்போது,
இன்றைய அரசியல்
கட்சிகளிலும்,
உலகலாவிய இயக்கங்களில் காணப்படும் போட்டி, பொறாமை, வெறித்தனம், பதவியாளர்களுக்கிடையே கடும் மோதல், அதனால் மனகசப்புகள், குரோதம் உட்பூசல்கள் இவை அனைத்தும் இந்த
இஸ்லாமிய
இயக்கங்களிலும்
குறைவில்லாமல் காணப்படுகின்றன. இஸ்லாத்தின் உண்மையான வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ள சகோதர, சகோதரிகள் ஹதீஸை கவனத்தில் கொண்டு செயல்பட
முன்வர
வேண்டும்.
இயக்க வெறிக்கு
அடிமையாகுதல்:
ஒரு இயக்கத்தைத் திறம்பட நடத்திவிடுவதால் முஸ்லிம் சமுதாயம்
மேன்மையடைந்துவிடப் போவதில்லை என்பதை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.
உதாரணமாக காதியாணிகள்
தங்கள்
இயக்கத்தின் நூற்றாண்டு
விழா கொண்டாடுகிறார்கள். உலகின் பல பகுதிகளில் அவர்களின் கிளைகள் இயங்குவதாக அறிவிக்கிறார்கள். பல
கோடிக்கணக்கான ரூபாய்க்கு வரவு-செலவு இருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் சாதித்து
விட்டதாக சொல்லிக்கொள்ள முடியுமா? சரிந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை தூக்க
நிறுத்த அவர்களால்
முடிந்ததா? சிந்தியுங்கள். அதே போல் மாற்று மதங்களிலும் எண்ணற்ற இயக்கங்கள் மிகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
இயக்கங்களை மிகத்திறம்பட
நாம்
இயக்கிக்காட்ட முடியும். ஆனால் ஒன்றும் சாதிக்க முடியாதது எது தெரியுமா? சுமார் 1000 வருடங்களுக்கு முன் சரிந்துவிட்ட முஸ்லிம்
சமுதாயத்தை
மீண்டும் அதன் உன்னத
நிலைக்கு கொண்டு வர வேண்டும். நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை அப்படியே அடிபிசகாமல் பின்பற்றுகிறவர்களால்
மட்டுமே அது சாத்தியமாகும். இயக்கவெறிக்கு அடிமையாகாமல் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக
பாடுபடும் இளைஞர்களை உருவாக்க
வேண்டும். இளைஞர்களின் உள்ளங்களில், அல்லாஹ்வுக்காக பாடுபட்ட நபித்தோழர்கள் அடைந்த அந்த ஆர்வத்தை ஒற்றுமையை
இவர்களும் அடைய பயிற்றுவிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வு:
களைந்து எரியப்படவேண்டிய கருத்து வேறுபாடுகள் இன்று
முஸ்லிம்களிடம் ஒரு கலையாகவே வளர்க்கப்பட்டு புதிது புதிதாய் புற்றீசலாய் தோன்றி, எதுவும் தீர்க்கப்படாமல் உள்ளது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்த நிலையில் கருத்து வேறுபாடுகளை களைந்து தீர்வு காண யாருமே முன்வரவில்லை
என்பதை நாளும் வளர்ந்து வரும் கருத்துவேறுபாடுகள் மெய்பிக்கின்றன.
கருத்து வேறுபாடுகளின்
ஆரம்பம் இந்த
மத்ஹபுகள் தான். இந்த
நான்கு மத்ஹபுகள் அல்லாமல்,
அறியாத மத்ஹபுகள் நிறைய
உள்ளது.
நபி(ஸல்) காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் கருத்துவேறுபாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன. இதுவே இன்று சிந்தனைக்கும், கவனத்திற்கும் உரியது. தீர்வாகாமல் எந்த கருத்துவேறுபாடும் தற்காலிகமாகக்கூட
நிறுத்தி வைக்கப்படவில்லை. கருத்து வேறுபாடுகளைக் காட்டி யாரும் பிரிந்து செல்லவுமில்லை.
பிளவுகளை உண்டாக்கவுமில்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து திகழ்ந்தார்களே
அவர்களிடம் படிப்பினை பெற
வேண்டும்.
அல்லாஹ்வின் கட்டளையை
மீறலாமா?
இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட போகிறோம் என்று மார்தட்டிக்கொண்டு, அன்னியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு ஓடோடி விரட்டிய இஸ்லாமிய இயக்கங்களுக்கு, அங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடிந்ததா? முடியவில்லையே! முஸ்லிம்களே முஸ்லிம்களை
குண்டுக்கு இறையாக்கும் அவலம் தொடர்ந்து நடைபெறுகிறதே! உலக முஸ்லிம் சமுதாயமே! உங்களுக்கு தொடர்ந்து
தோல்வி ஏற்படுவதற்கு அல்லாஹ்
இட்டகட்டளையை ஏதோ ஒன்றை மீறிக் கொண்டிருக்கின்றீர்கள். சிந்தியுங்கள் அது வேறு ஒன்றுமல்ல நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்களா? இல்லை!
இற்றுப்போன கந்தல் கயிறுகளை பற்றி பிடித்துக்கொண்டு பிரிந்து நிற்கும் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை காப்பாற்றியே
தீருவோம் என்று கோரஸ் பாடினார்களே! முடிந்ததா?
அல்லாஹ் கூறுகிறான்:
எந்த சமுதாயம் தம்மை தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்தமாட்டான்.
(அல்-குர்ஆன் 3: 11)
இன்று உலகளாவிய அளவில்
முஸ்லிம்களுக்கு கடுமையான பின்னடைவும், இன்னல்களும், துன்பங்களும், அழிவும், நாசமும், பொருளாதார பாதிப்பும் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணம்
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை துச்சமாக மதித்து நடப்பதேயாகும். இஸ்லாம் மேலோங்கி இருந்த
காலகட்டத்தில் ஒன்றுப்பட்டிருந்த அரபு நாட்டினர் இன்று அவர்களின் மார்க்கம்
இஸ்லாமாக
இருந்தும் தாய்மொழி
அரபியாக இருந்தும் சவூதி,
குவைத், யமன், ஓமன், பாலஸ்தீன் என பல்வேறு பிரதேச அடிப்படையில் பெருமை பேசி
பிரிந்து கிடப்பது பெறும் தவறாகும். இப்பேதங்களை மறந்து அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விட்டாலே
போதும் இஸ்ரேல் இருந்த இடம்
தெரியாமல் போய்விடும்.
அல்லாஹ் நம்மை பார்த்து, ஒற்றுமையாக இருங்கள் பிரிந்து விடாதீர்கள் அப்படி பிரிந்தால் கோழையாகி
விடுவீர்கள்,
பலவீனப்பட்டு போவீர்கள், இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் நஷ்டத்தை
சந்திப்பீர்கள்,
அழிவின் அதால பாதாளத்திற்கு போய் விடுவீர்கள். வரம்பு
மீறாதீர்கள் ஒருவரை ஒருவர் மதியுங்கள், ஒருவரின் உயிர், உடமை, மானம் போன்ற அமானிதத்திற்கு கேடு விளைவிக்காதீர்கள், பிறரை இழிவாக, கேவலமாக எண்ணியும், உங்களை உயர்வானவர்களாக நினைத்தும் பெருமை கொள்ளாதீர்கள், பீற்றிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ்வும்
அவனது
தூதரும் சொன்ன உபதேசத்தை
காற்றில் வீசிவிட்டு தாங்களாக ஆளுக்கொரு மத்ஹபுகளை, தரீக்காக்களை, இயக்கங்களை உண்டாக்கிக் கொண்டு செயல்பட்டால்
அல்லாஹ் நம் நிலையை மாற்றமாட்டான்
என்பது அல்லாஹ்வின் தெளிவான எச்சரிக்கையாகும்.
கருத்து வேறுபாடு:
உண்மையான ஒற்றுமை என்ன என்பதை உணர்வதும், உணர்த்துவதும் அவசியமாகும். அல்லாஹ்வுக்கும்
அவனுடைய
தூதருக்கும்
கட்டளைகளுக்கு மாற்றமாக,
பெரியோர்கள், இமாம்கள், முன்னோர்கள் சொல்படி பிடிவாதமாக செயல்படும் முஸ்லிம்கள், அவர்களுக்குள் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், சண்டை சச்சரவுகள், கொடுக்கல், வாங்கல் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று
நாளைக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது. (ஹதீஸ்).
குரோதம் களைந்து
ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது நம்மவர்கள் கொள்கை விஷயத்தில் ஏற்படும் சிறுசிறு விஷயத்தைக்கூட மலையளவு பெரிதுபடுத்தி
ஆத்திரப்படும் அளவுக்கு பிரச்சனைகளை உருவாக்கி கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறியே நிரந்தரமாக
பிரிந்து
விடுகின்றனர்.
இப்படிப்பட்ட
சூழ்நிலையில்கூட இஸ்லாம் கருத்து வேறுபாட்டை களைந்து ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கின்றது.
ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், காரசாரமான வாதங்களும், சச்சரவுகளும் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள், பிரிந்துவிடவில்லை.
இப்னு உமர்(ரலி) அவர்கள் ‘ஹஜ்ஜாஜு பின் யூசுப்’ என்னும் மிகக்கொடிய அநியாயம், அக்கிரமம் செய்து கொண்டிருந்தவனுக்குப் பின்னால்
தொழுதுள்ளார்கள். என்று இமாம் புஹாரி(ரஹ்) அவர்களும் அபூ ஸயீதில் குத்ரி(ரஹ்) அவர்கள் பெரும்
குழப்பவதியாக இருந்த மர்வான் என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம்
முஸ்லிம்(ரஹ்) அவர்களும் மற்றும்
திர்மிதி,
அபூதாவூத், நஸயி, முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள். ஆக ஸஹாபாக்கள் மத்தியில்
சமுதாயத்தை பிரித்து உடைத்தெரியும் விஷயத்தில் கடுகின் முனையளவு கூட விரும்பக் கூடியவர்களாக
இல்லை.
போர்க் கால அவசியம்:
ஒரு முஸ்லிம் ஏதேனுமொரு
இயக்கத்தில் இனையவில்லையென்றால் அது வியப்பிற்குறிய செய்தியாக பேசப்படுகிறது. அல்லாஹ்
கூறுகிறான்: எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவினர்களாக
பிரிந்து விட்;டனரோ (அவ்வாறு ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த)
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக்
கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்-குர்ஆன் 30: 32)
இன்றே முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். நம்மவர்களிளேயே
சிலர்
இக்கால கட்டத்தில் அது
சாத்தியமில்லை என்று விமர்சிப்பது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றது. அனைத்து முட்டுக்கட்டைகளையும்
தகர்க்க வேண்டும். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுபட தடையாக
இருப்பவைகளை உடைத்தெரிய அனைத்து
முஸ்லிம்களும் போர்க்கால அவசரத்துடன் முயல வேண்டும். இனி ஒற்றுமையை வெற்று முழக்கங்களாலும், வெறும் கோஷங்களாலும் உருவாக்க முடியாது.
உழைப்பு மற்றும்
முயற்சியால் மட்டுமே
உருவாக்க முடியும்.
நம்மை பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் நிச்சயமாக
சன்மார்க்கமான உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம்தான். மேலும் நானே உங்களுடைய இறைவனாக
இருக்கிறேன்! எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் (அல்-குர்ஆன் 23: 52)
(பின்னர்) அவர்கள்
தங்களுக்கிடையே தங்கள் காரியங்களில்
பிளவுபட்டனர்… (அல்-குர்ஆன் 21: 93)
நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றொருவருக்கு) சகோதரர்களே! ஆகவே
சண்டையிட்டுக் கொள்ளும் உங்களுடைய இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள்
அருள்
செய்யப்படுவதற்க்காக
அல்லாஹ்வுக்கு பயந்துக் கொள்ளுங்கள்! (அல்-குர்ஆன் 49: 9-10)
(1) அல்லாஹ்வுக்கு
கீழ்ப்படியுங்கள்
(2) இத்தூதருக்கும் உங்களில்
அதிகாரம்
வகிப்பவர்களுக்கும்
கீழ்ப்படியுங்கள்
(3) பின்னர் உங்களுக்குள்
ஏதேனும் ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு (பிணக்கு, தர்க்கம்) ஏற்பட்டால், அதை அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் (தீர்வுக்காக) கொண்டு செல்லுங்கள். (4) நீங்கள் அல்லாஹ்விடத்தும், மறுமைநாளிடத்தும் உறுதியான ஈமான் கொண்டோர்களாயின் இதுவே (உங்களுக்கு) மிகவும்
சிறப்பான அழகான முடிவாயிருக்கும். (அல்-குர்ஆன் 4: 59)
யாஅல்லாஹ்! நாங்கள்
அனைவர்களும் முழு இஸ்லாமிய வாழ்க்கையில் நுழைந்திடவும், குர்ஆன், ஹதீஸை வாழ்க்கையின் துணையாக அமைத்து வழி நடத்திய சத்திய ஸஹாபாக்கள் எப்படி
செயல்பட்டார்களோ அதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற
அருள் புரிவாயாக. ஆமீன்!